அரக்கோணமும் சென்னை பெருநகருடன் இணைகிறது; சி.எம்.டி.ஏ. எல்லையை விரிவாக்க முடிவு

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை சி.எம்.டி.ஏ. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அந்த பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 3-வது முழுமை திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரக்கோணமும் சென்னை பெருநகருடன் இணைகிறது; சி.எம்.டி.ஏ. எல்லையை விரிவாக்க முடிவு
Published on: 

சென்னை,

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) எல்லையை தற்போதுள்ள 1,189 சதுர கிலோ மீட்டரில் இருந்து 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகாவும் சென்னை பெருநகரப் பகுதியில் இணைக்கப்படுகிறது. சென்னை பெருநகரப் பகுதி தற்போது 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த பகுதிக்கான 2-வது முழுமை திட்டத்தின் கால அவகாசம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து, அடுத்த 20 ஆண்டுகளுக்கான 3-வது முழுமை திட்டத்தை தயாரிக்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டன.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, 26 தலைப்புகளில் வரைவு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

5,904 சதுர கிலோ மீட்டர்

சென்னை பெருநகரின் எல்லையை விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்துக்கு கடந்த 2024-ம் ஆண்டு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுடன், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகாவும் சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் கொண்டு வரப்படுகிறது.இதன் மூலம் சென்னை பெருநகரப் பகுதியின் மொத்த பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கிறது.

விரிவாக்க பகுதிகளிலும் திட்டம்

முதற்கட்டமாக 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை மட்டும் கணக்கில் கொண்டு 3-வது முழுமை திட்டத்தை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு பதிலாக, தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகளையும் உள்ளடக்கி முழுமை திட்டத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ள சி.எம்.டி.ஏ. அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இதையடுத்து, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளை சி.எம்.டி.ஏ. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அந்த பகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் 3-வது முழுமை திட்டத்தை தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதன் மூலம் சென்னை பெருநகரத்தின் திட்டமிட்ட வளர்ச்சியில் அரக்கோணம் உள்ளிட்ட புதிய பகுதிகளும் இடம்பெற உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com