

சென்னை,
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம் கிராமத்தில் தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தொன்மையான சுடுமண் முத்திரை என்ற பொருள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சுடுமண்ணால் ஆன முத்திரை 256 செ.மீ. ஆழத்தில் அகழாய்வு குழியில் இருந்து வெளிக்கொணரப்பட்டு உள்ளது. இந்த முத்திரையானது கனமாகவும், தலைப்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், உடல்பகுதியானது உட்குழிவுள்ள உருளை வடிவத்தினையும் கொண்டுள்ளது.
முத்திரையின் தலைப்பகுதியில் கீறப்பட்ட 3 பிரிவுகளை கொண்ட தடிமனான வட்ட வடிவ அலங்காரங்கள் உள்ளன. இந்த வடிவத்தின் நடுவே புள்ளிகள் காணப்படுகின்றன. கைப்பிடி பகுதியின் பக்கவாட்டிலும், முத்திரையின் தலைப்பகுதியிலும் சிறிது சேதம் அடைந்துள்ளது. இம்முத்திரையின் மேற்புறம் நன்கு வழுவழுப்பாகவும், அடிபகுதி சற்று சொரசொரப்பாகவும் உள்ளது. மிகநேர்த்தியாக கையால் வனையப்பட்டுள்ள இம்முத்திரையானது 2.75 செ.மீ. உயரமும், முத்திரையின் தலைப்பகுதியின் விட்டம் 2.80 செ.மீ. ஆகவும் உள்ளது. இம்முத்திரையின் எடை 24.6 கிராம் ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.