

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
முன்னதாக நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இன்று அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடக்கூடிய அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருந்தாலும், வாக்கு எண்ணிக்கையின்போது எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் ஒவ்வொரு சுற்று முடிவுகளின் எண்ணிக்கை விவரங்களை அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு வழங்குவது தொடர்பாக அலுவலர்களுக்கு அர்ச்சனா பட்நாயக் ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தி முடித்தது போலவே, வாக்கு எண்ணிக்கை பணியை எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லாமல், துரிதமாகவும், தெளிவாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என அர்ச்சனா பட்நாயக் கேட்டுக்கொண்டார்.