எடப்பாடி பழனிசாமியுடன் சி.வி.சண்முகம் ஆதரவாளர் ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சி.வி.சண்முகம் ஆதரவாளர் வருகை தந்தார்.
எடப்பாடி பழனிசாமியுடன் சி.வி.சண்முகம் ஆதரவாளர் ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார் சந்திப்பு
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசுக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தனர். இதனால் அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் அதிகரித்தது.

சட்டமன்றத்தில் ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், தவெக அமைச்சரவையில் இவர்களுக்கான இடம் மறுக்கப்பட்டது. இதனால் எஸ்பி வேலுமணி தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த எஸ்.பி. வேலுமணி,

எங்களை பொறுத்தவரையில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்துள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை தான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அதற் குள் அ.தி.மு.க.வில் பிளவு என்கிறார்கள். பிளவு எல்லாம் ஒன்றும் கிடையாது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த கருத்து வேறுபாட்டை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமியிடம் தான் கோரிக்கை வைக்கிறோம். எப்படி தோல்வியை சந்தித்தோம் என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகிறோம்.

அதேபோன்று நாங்கள் கட்சி அலுவலகத்திற்குள் செல்லப்போகிறோம் என்று எங்கள் மீது கரும்புள்ளி குத்துகிறார்கள். சி.வி.சண்முகம் பேசும்போது இது குறித்து தெளிவாக பேசி இருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் இதுவரையிலும் எங்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அவரிடம் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

எல்லாரையும் ஒன்று சேர்த்து கட்சியை பலப்படுத்தி மீண்டும் ஜெயலலிதா ஆட்சி தமிழகத் தில் அமைய வேண்டும். கட்சி எங்களின் உயிர். நாங்கள் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிக்கும் போதில் இருந்து ஒரு தலைமுறை தாண்டி அந்த கட்சியில் இருக்கிறோம். சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட எங்கள் தந்தை எல்லோரும் இந்த கட்சிக்காக இருந்தவர்கள். அ.தி.மு.க. என்றால் எங்கள் உயிர் மூச்சு. கட்சியை உடைக்கவோ, பிரிக்கவோ எங்களுக்கு எண்ணம் கிடையாது. தோல்வியை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். அதை ஆராய வேண்டும். மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி கொண்டு வருவதற்கு பாடு படுவோம் என்றார்.

இதனிடையே தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விரைவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவுவார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தநிலையில், சி.வி.சண்முகம் ஆதரவாளரான ஆற்காடு எம்.எல்.ஏ. சுகுமார் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது சி.வி.சண்முகம் தரப்பினர் சமாதான முயற்சியில் இறங்கி வருவதாகவும் மனம்மாறி அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிப்போம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com