

கோவை,
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தனியார் நூற்பாலைகள், ஆயிரக்கணக்கான குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்த நிறுவனங்களில் தற்போது வடமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே வங்காள தேச நாட்டை சேர்ந்த சிலர் கோவையில் பதுங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் கடந்த வாரம் அன்னூர் போலீசாருடன் இணைந்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் சோதனை நடத்தினர். தொழிலாளிகள் தங்கியிருந்த அறைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது அங்கு எந்தவித ஆவணங்களும் இன்றி வங்காள தேசத்தை சேர்ந்த 11 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வங்காள தேசத்தை சேர்ந்தவர்களை ஒருசில ஏஜெண்டுகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக அழைத்து வந்து அன்னூர் நிறுவனத்தில் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
கோவையில் வங்காளதேச நாட்டவரின் ஊடுருவல் பின்னணியில் உள்ள ஏஜெண்டுகள் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அன்னூரில் பிடிபட்ட 11 பேரும் சேலத்தில் உள்ள வங்காளதேச அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள வங்காளதேசத்தினர், மேற்குவங்காள மாநிலத்தவர் போல போலி ஆவணங்களை தயார்செய்து, கொங்கு மண்டலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் திருப்பூர், கோவை மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்து உள்ளது.
இதனால் மாநிலம் முழுவதும் உள்ளூர் போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் அந்த மாவட்டங்களில் வங்காளதேசத்தினர் யாராவது சட்டவிரோதமாக வந்து உள்ளனரா?, அவர்கள் இங்குள்ள தொழில் நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிகின்றனரா? அல்லது விடுதிகளில் தங்கி உள்ளனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.