மின்கட்டணம் உயர்வா? - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

மேகதாது விவகாரத்தில் அதிமுக தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
மின்கட்டணம் உயர்வா? - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்
Published on

சென்னை,

மின்கட்டணம் குறித்த மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வாட்ஸ்-அப்பில் வந்த ஏதோவொரு தவறான தகவலைத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். பலருக்கும் மின் கட்டணம் அதிகம் வந்திருப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்தாண்டுடன் இந்தாண்டு ஒப்பிடுகையில், கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் (கோடை) 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு அளவில் மின் கட்டணம் வந்தது. ஆனால், இந்தாண்டில் 9.60 லட்சம் பேருக்குத்தான் அதிகரித்துள்ளது. கடந்தாண்டைவிட இந்தாண்டில் 2 லட்சம் பேர் குறைந்துள்ளனர்.

மக்களைக் குழப்புவதற்காகவே மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதுபோல 3.70 லட்சம் புகார்களெல்லாம் வரவில்லை. மின் கட்டணம் உயர்வு என வதந்தி பரவுகிறது. வெயில் காலத்தில் அதிகளவு ஏசி பயன்படுத்துவதால் கட்டணம் உயர்கிறது. மின் பயன்பாடு அதிகரிக்கும்போது மின் கட்டணம் அதிகரித்து வரத்தான் செய்யும்.

மேகதாது பிரச்சினை இரு மாநிலம் விவகாரம் என்பதால் முதல்-அமைச்சர் விஜய் அனைத்து தரப்பு ஆலோசனைகளையும் கேட்கிறார். மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தேவையின்றி மக்களை குழப்பும் வகையில் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆணையத்தில் இருந்து நீர் திறக்க வேண்டும என்று உத்தரவு கொடுத்த பின்னரும் கர்நாடகா நீர் திறக் மறுக்கிறது. மேகதாது விவகாரத்தில் சட்டநடவடிக்கை தொடர்பாக ஒரு சில நாட்களில் அறிவிப்பு வரும். முதல்-அமைச்சர் விஜய் கர்நாடகா செல்வாரா?, இல்லையா? என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.

மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார்; இந்த பிரச்சினையில் தெளிவாக உள்ளோம்; தமிழக மக்களுக்கு எதிராக செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இப்படி செய்கிறதா என தெரியவில்லை?. மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர் தரப்பிலிருந்து ஒரு வாரத்துக்குள் தேவையான முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com