

சென்னை,
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு இன்று மின்துறைக்கு என தனியாக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துறையின் அமைச்சர் நிர்மல் குமார் மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும் அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில், “தமிழகத்தில் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது. அனைத்து நுகர்வோர்களுக்கும் மின் கட்டணம் உயர்வு இல்லை. மின்வாரியத்தில் செலவினம் இருந்திருக்கிறது. வருவாயும் கிடைத்துள்ளது. மக்களுக்கு பலன் கிடைக்கவில்லை. த.வெ.க. ஆட்சியமையவில்லை என்றால் மின்வாரியம் தனியார் மயமாகியிருக்கும். மின் வாரியத்தை மேம்படுத்த வேண்டிய பணிகளில் ஈடுபடுவோம்.
கட்டணம் உயர்த்தப்படும் போது அதே அளவுக்கு செலவினங்களும் உயர்த்தப்படுகிறது. செலவினங்கள் அதிகரிக்கிறது தவிர கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை. புதிய பணியாளர் தேர்வு மேற்கொள்ளப்படவில்லை மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.
2000-ம் ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேர் வேலை பார்த்த இடம். இத்தனை ஆண்டுகளில், நமது மின் தேவை, கட்டமைப்புகள், மின்வாரியத்தின் வருவாய் அனைத்தும் அதிகரித்திருகிறது. ஆகவே, இந்த பணியிடங்கள் அப்படியே இரட்டிப்பாகியிருக்க வேண்டும். ஆனால், இன்று 74,000 பேர் தான் வேலை பார்க்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு பிறகு 30 ஆண்டுகள் பின் நோக்கிப் போயிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.