வாக்காளர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? - புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மத்திய அரசின் பத்திரிகை தகவல் மைய அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர்களுக்கு பணம், மதுபானம், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சி.பி.ஐ.சி.), டெல்லியில் உள்ள வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளன. அதன்படி, சென்னை ஜி.எஸ்.டி. மண்டலம் ஒவ்வொரு ஆணையரகத்திலும் போதிய அளவு பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளன.இதன்மூலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அனைத்து மாவட்டங்களையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த குழு தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சேமிப்புக் கிடங்குகளையும் கண்காணித்து வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக புடவைகள், மின்சாதனங்கள், பாத்திரங்கள், ரொக்கம் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அதனை கண்டறிந்து தடுக்கும்.

சென்னை ஜி.எஸ்.டி. மண்டலத்தில் உள்ள அனைத்து ஆணையரகங்களும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட சட்ட அமலாக்க முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும்.

இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு உள்ளன.

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சட்டவிரோதமாக பணம், பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு தெரியவந்தால் 044- 24360140 என்ற தமிழ்நாடு கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணிலும், loksabhaeleche-2024@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம்.

புதுச்சேரியை பொறுத்தமட்டில் 0413-2221999 என்ற தொலைபேசி எண்ணிலும், help-pycgst@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com