தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்படுகிறதா? - அமைச்சர் விளக்கம்


தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மூடப்படுகிறதா? - அமைச்சர் விளக்கம்
x

குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதை பெரு நிறுவனங்கள் தவிர்க்கின்றன என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறதா என்பதற்கு பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய வருமான வரிசட்டப்படி கொள்முதல் செய்த நிறுவனங்கள், குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். அப்போது தான் அந்த நிதியாண்டில் வரவு செலவு கணக்கில் இந்த தொகை செலவு கணக்கில் கொண்டு வர அனுமதிக்கப்படும். இல்லையென்றால் இந்த தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும். இந்த புதிய சட்ட விதியின்படி பெருநிறுவனங்களுக்கு உரிய நாட்களுக்குள் நிலுவைத்தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவர்கள் உதயம் பதிவு செய்த குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதை பெரு நிறுவனங்கள் தவிர்க்கின்றன. அல்லது தாங்கள் கொள்முதல் செய்யும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை உதயம் பதிவினை ரத்து செய்ய வற்புறுத்துகின்றன. அதனால் சில குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உதயம் பதிவினை ரத்து செய்து வருகின்றன. ஆனால் அந்த நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி கொண்டு தான் இருக்கின்றன.

எனவே பதிவு ரத்து செய்வதை கணக்கில் கொண்டு நிறுவனங்கள் மூடப்பட்டது என்று கூற முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் எம்.எஸ்.எம்.இ. தொழில் நிறுவனங்களுக்கு உச்ச நேர நுகர்வு கட்டண மானியமாக ரூ.595.36 கோடியும், நெட்வொர்க் கட்டண மானியமாக ரூ.12.27 கோடியும் என மொத்தம் ரூ.607.63 கோடி மானியமாக வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story