விநாயகர் சிலைகள் செய்வதற்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

விநாயகர் சிலைகள் செய்வதற்கு பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.
விநாயகர் சிலைகள் செய்வதற்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? தலைமை நீதிபதி அமர்வு கேள்வி
Published on

இந்து முன்னணியை சேர்ந்த அரசுப்பாண்டி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட சிலைகள் வைத்து பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயன வண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இந்த சிலைகள் ஆறு, குளம், கிணறுகளில் கரைக்கப்படுகின்றன. ஆனால், அவை கரைவதில்லை. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. இது உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்குவிளைவிக்கிறது.

இதற்கிடையே, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற பொருட்களால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் எளிதில் கரைவதில்லை என்பதாலும், ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை செய்ய அனுமதி இல்லை எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. எனவே, மதுரையில் களிமண் சிலைகளை மட்டும் செய்ய அனுமதி அளித்து, அதனை ஆறு, குளத்தில் கரைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, "விநாயகர் சிலையை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், எவ்வாறு பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன், விநாயகர் சிலைகள் செய்வதற்கு, பசுமை தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com