கோடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமானவரி அதிகாரிகள் சோதனையா?

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக வதந்தி பரவியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கோடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமானவரி அதிகாரிகள் சோதனையா?
Published on

கோத்தகிரி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த மாதம் 24-ந்தேதி 11 பேர் கொண்ட கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தனர். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை தாக்கினர். பின்னர் அவர்கள் பங்களாவுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மேற்பார்வையில் தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். அவரது கூட்டாளியான சயன் மற்றொரு விபத்தில் காயம் அடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

புகைப்படங்களை காட்டி விசாரணை

இந்த நிலையில் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக எஸ்டேட்டில் உள்ள காவலாளிகள், எஸ்டேட் நிர்வாக அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்தது.

முக்கியமாக கொலையாளிகள் தாக்கியதில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்கு பிறகு பணிக்கு திரும்பி உள்ள காவலாளி கிருஷ்ணபகதூரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் கோடநாடு எஸ்டேட்டுக்கு வந்து கிருஷ்ண பகதூரிடம், சில சந்தேக நபர்களின் புகைப்படங்களை காட்டி விசாரணை நடத்தினார்.

வருமானவரி சோதனையா?

இதற்கிடையில் நேற்று காலை கோடநாடு எஸ்டேட் பங்களாவில் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 கார்களில் வந்து சோதனை நடத்துவதாகவும், அப்போது பங்களாவில் இருந்து கட்டுக்கட்டாக பணம், ஆவணங்கள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.

வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தது போன்ற வதந்தி ஏன்? என்பது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை, மற்றும் தொழில் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் முத்திரையுடன் கூடிய 11 கார்களில் பாராளுமன்ற தொழிலாளர் குழுவினர் ஊட்டிக்கு வந்து விட்டு, தேயிலை எஸ்டேட்டுகள் அதிகம் உள்ள கோடநாடு வந்து பார்வையிட்டுள்ளனர். அவர்களுடன் பாதுகாப்புக்காக போலீசாரும் சென்றுள்ளனர். இதனால் வருமான வரித்துறையினர் வந்ததாக வதந்தி பரவி உள்ளது. வருமான வரி சோதனை எதுவும் நடக்கவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com