சென்னையில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகளும் ஒளிர்கிறதா? - அலுவலர்கள் கள ஆய்வு..!

ஒளிராத மின் விளக்குகள் தொடர்பாக பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
சென்னை மாநகராட்சி
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 3,11,285 தெரு மின் விளக்குகள் 100% ஒளிர்வதை உறுதி செய்யும் வகையில் நேற்று (16.09.2026) இரவு மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஏரியாத 2,079 தெரு மின் விளக்குகள் கண்டறியப்பட்டு, அவற்றை உடனடியாக ஒளிரச் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள், தெருக்கள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதிகளில், மயான பூமிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின் விளக்குகளும் உயர் கோபுர மின் விளக்குகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3,11,285 மின் விளக்குகள் அனைத்தும் 100% ஒளிர்வதை உறுதி செய்திடும் வகையில், அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரனால் உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில், வடக்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (கல்வி), மத்திய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (சுகாதாரம்), தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இணை ஆணையாளர் (பணிகள்) ஆகியோர் வட்டார பொறுப்பு அலுவலர்களும், 1 முதல் 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அலுவலர்களாக உயர் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு நேற்று 16.09.2026 இரவு முழுவதும் தெருவிளக்குகள் 100% ஒளிர்வது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2,079 மின் விளக்குகள் எரியவில்லை

இந்த கள ஆய்வில் மொத்தமுள்ள 3,11,285 தெரு மின் விளக்குகளில் 2,079 தெரு மின் விளக்குகள் ஏரியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றில், மழைநீர் வடிகால் பணி, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பணி, சென்னை குடிநீர் மற்றும் கழிவு வாரியப் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் 850 தெரு மின் விளக்குகளும், புதை மின்வட பழுதினால் 230 தெரு மின் விளக்குகளும், 999 எண்ணிக்கையிலான எல்இடி (LED) மின் விளக்குகள் ஏரியாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2,079 தெரு மின் விளக்குகளையும் எரிய வைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்படும்

இவற்றில் சேவைத்துறைகளின் பணிகள் நடைபெறும் இடங்களில் தற்காலிக தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. எரியாமல் உள்ள 999 எல்இடி (LED) மின் விளக்குகளை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்தும், புதை மின்வடம் பழுது தொடர்பான 230 மின்விளக்குகளை 48 மணி நேரத்திற்குள் சரிசெய்தும் ஏரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மரக்கிளைகளால் விளக்குகளின் வெளிச்சம் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து, வாரந்தோறும் மரக்கிளைகளை அகற்றி தெரு மின் விளக்குகள் நன்கு ஒளிர்வதை உறுதி செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தெரு விளக்குகள் பழுது பார்க்கும் சமயத்திலும் மற்ற நேரத்திலும் மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகிறது.

100% ஒளிர்வதை உறுதி செய்திட உத்தரவு

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மின் விளக்குகள் அனைத்தும் ஒளிர்வதைத் தொடர்ந்து கண்காணித்து அனைத்து மின் விளக்குகளும் நூறு சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்திட மாநகராட்சி ஆணையாளரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஒளிராத மின் விளக்குகள் தொடர்பாக பொதுமக்கள் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com