

சென்னை,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகளின் அத்துமீறல்கள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வழிப்பறி. எங்கு பார்த்தாலும் கொலைகள். எங்கு பார்த்தாலும் கொள்ளைகள். எங்கு பார்த்தாலும் பெண்களும், பெண் குழந்தைகளும் மாயம் என்று மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் உருவாகியுள்ளது.
மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் “ஆட்சியில் இருப்பது நாங்கள். எங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது” என்ற அதிகாரத் திமிருடன் பேசும் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் த.வெ.க. நிர்வாகி கார்த்திகேயன், “எங்கள் ஆட்சியில் என் மீது புகார் கொடுத்தவன் யார்? என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று போலீசார் முன்னிலையில் கூறி ரகளையில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது ஒரு தனிநபரின் செயலாக மட்டும் கடந்து செல்லக்கூடிய விஷயம் அல்ல. ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்திலேயே “எங்கள் ஆட்சியில்” என்று கூறும் அளவுக்கு அதிகாரத்தைத் தங்களுடைய கட்சியின் சொத்தாகக் கருதும் மனப்பான்மை எப்படி உருவானது? அரசு நிர்வாகமும் காவல்துறையும் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளவை என்று கருதும் நிலைக்கு யார் பொறுப்பு?
மக்கள் வாக்களித்தது ஆட்சி நிர்வாகத்திற்கு மட்டுமே. அரசு இயந்திரத்தைத் தங்களுடைய கட்சியின் சொத்தாகக் கருதுவதற்காக அல்ல.
எங்கு பார்த்தாலும் வழிப்பறி, கொலை, கொள்ளை, பெண்கள் மாயம் என்ற செய்திகள் தொடர்ந்து வரும் நிலையில், மக்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பில்லை. ரோட்டிலும் பாதுகாப்பில்லை என்ற நிலைதான் தமிழக வெற்றிக் கழக அரசின் சட்டம் ஒழுங்கு சாதனையா?
“எங்கள் ஆட்சியில் என் மீது புகார் கொடுத்தவன் யார்? என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று ஆளும் கட்சி நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்திலேயே திமிராகப் பேசும் அளவுக்கு, காவல்துறையும் அரசு நிர்வாகமும் தமிழக வெற்றிக் கழகத்தின் தனிச்சொத்து என்று மக்கள் எழுதிக் கொடுத்துவிட்டார்களா?
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக சட்டத்தைவிட மேலான அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக நினைத்துக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டதா? சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் என்பதை தமிழக வெற்றிக் கழக அரசு உறுதி செய்யுமா? செய்யாதா?
மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமையை வழங்குவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டுமா?. மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக நடமாட வேண்டும். வீட்டிலும் பாதுகாப்பு வேண்டும். வீதியிலும் பாதுகாப்பு வேண்டும்.
மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அரசு, மக்கள் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே தேடிக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளுவதை, மக்கள் நீண்ட நாட்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.