வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதா?

முக்குருத்தி வனப்பகுதியில் வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதா? என்று தமிழக-கேரள வனத்துறையினர் கூட்டு ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதா?
Published on

முக்குருத்தி வனப்பகுதியில் வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதா? என்று தமிழக-கேரள வனத்துறையினர் கூட்டு ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.

புலிகள் சாவு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 புலிகள் உயிரிழந்தன. அதில், 6 குட்டிகளும் அடங்கும். குறிப்பாக சின்ன குன்னூர் பகுதியில் இறந்து கிடந்த 4 குட்டிகள், தாய் பால் கிடைக்காமல் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் தாய் புலி எங்கே?, அது குட்டிகளை பிரிந்து சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. அது வேட்டையாடப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இறந்து விட்டதா? என்பது தெரியவில்லை. இதனால் அந்த புலியை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்டு ரோந்து

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் வித்யா உத்தரவின்பேரில் முக்குருத்தி தேசிய பூங்கா வனச்சரகத்தில் தாய் புலி மற்றும் வேட்டை கும்பல், சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்டறிய வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தமிழக-கேரள வனத்தில் சிஸ்பெரா சுற்று பகுதியில் முக்குருத்தி வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையிலும், நீலகிரி கோட்டம் அவலாஞ்சி அருவி கொலாரிபேட்டை வழித்தடத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் வனச்சரகர் பிரசாத் தலைமையிலும் வனப்பணியாளர்கள், புலிகள் பாதுகாப்பு சிறப்பு பணியாளர்கள் துப்பாக்கிகள் ஏந்தியவாறு கூட்டு ரோந்து சென்றனர்.

கேமரா காட்சி

அவர்களுடன் கேரள வனத்துறை அலுவலர் சாஜி வர்கீஸ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் சைலண்ட் வேலி தேசிய பூங்காவின் பவானி வனச்சரகர் கணேஷ் அடங்கிய குழுவினரும் இணைந்து கூட்டு ரோந்து பணி மேற்கொண்டனர். அவர்கள் முக்குருத்தி தேசிய பூங்காவில் ரகசியமாக பொருத்தப்பட்ட தானியங்கி கேமிராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு கண்காணிப்பு மையத்திற்கு ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியில் அத்துமீறி நுழையும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com