தமிழக கோவில்களில் சிலைகளை பாதுகாக்க தனி அறைகள் கட்டப்பட்டுள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கோவில்களில் சிலைகளை பாதுகாக்க தனி அறைகள் கட்டப்பட்டுள்ளதா? என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நிபந்தனைகளை அமல்படுத்தியது குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழக கோவில்களில் சிலைகளை பாதுகாக்க தனி அறைகள் கட்டப்பட்டுள்ளதா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தது. பின்னர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் குறித்து பட்டியல் தயாரிக்க வேண்டும்; கோவில்களில் தனி அறை அமைத்து சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 75 நிபந்தனைகளை பிறப்பித்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ஐகோர்ட்டு பிறப்பித்த 75 நிபந்தனைகளில் 38 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், கோவில் சிலைகளை பாதுகாக்க இதுவரை தனி அறை கட்டப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து, தனி அறைகள் கட்டப்பட்டுள்ளதா? என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட 75 நிபந்தனைகளில் நிறைவேற்றப்பட்டது போக மீதமுள்ள நிபந்தனைகளை அமல்படுத்தியது குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com