தேனி கலெக்டர் பெயரில் பணம் பறிக்க முயன்றது நைஜீரியாவை சேர்ந்தவர்களா?

தேனி கலெக்டர் பெயரில் போலியான வாட்ஸ்-அப் கணக்குகள் தொடங்கி பணம் பறிக்க முயன்றது நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களா? என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேனி கலெக்டர் பெயரில் பணம் பறிக்க முயன்றது நைஜீரியாவை சேர்ந்தவர்களா?
Published on

கலெக்டர் பெயரில் போலி கணக்கு

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனின் பெயரில் கடந்த ஜூன் மாதம் போலியான வாட்ஸ்-அப் கணக்கை தொடங்கிய மர்ம நபர், அதில் கலெக்டரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போன்று குறுஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றார்.

அதே மாதத்தில் மற்றொரு எண்ணில் இருந்தும் கலெக்டரின் பெயரில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்தது. இதுதொடர்பாக கலெக்டர் முரளிதரன் கொடுத்த புகாரின் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், மீண்டும் கலெக்டரின் பெயரில் மற்றொரு எண்ணில் இருந்து போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி நடந்தது. அதன்பேரிலும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பெங்களூரு தொழிலாளி

முதலில் தொடங்கப்பட்ட போலியான வாட்ஸ்-அப் கணக்கில் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த செல்போன் எண் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பீனியா பகுதியை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த முகவரிக்கு தேனியில் இருந்து தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு செல்போன் எண்ணுக்கு சொந்தக்காரர் ஒரு கூலித்தொழிலாளி என்பதும், அவருக்கும் இந்த மோசடிக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரியவந்தது.

செல்போன் பறிமுதல்

யாரோ மர்ம நபர் கடன் கொடுப்பதாக கூறி அவருடைய செல்போன் எண்ணில் அழைத்து, ஓ.டி.பி. என்ற ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை வாங்கி இருக்கிறார். அதன் மூலம் அந்த மர்ம நபர், இந்த தொழிலாளியின் செல்போன் எண்ணை பயன்படுத்தி போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

அதேநேரத்தில் கலெக்டரின் பெயரில் போலி கணக்கு தொடங்கிய செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து அழைப்பு வந்ததாலும், சிலர் போலியான கணக்கு தொடங்கி இருப்பதாக கூறி மிரட்டியதாலும் அந்த சிம்கார்டை உடைத்து வீசிவிட்டு, செல்போனை விற்பனை செய்து விட்டதாகவும் அந்த தொழிலாளி கூறினார். இதையடுத்து அந்த செல்போனை விற்ற கடைக்கு சென்ற போலீசார் அதை பறிமுதல் செய்தனர்.

நைஜீரியாவை சேர்ந்தவர்கள்

பின்னர் வாட்ஸ்-அப் கணக்கை செயலில் வைத்திருந்த நபர் குறித்து தகவல் தொழில்நுட்ப வசதிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, வி.பி.என். (விர்ச்சுவல் பிரைவெட் நெட்வொர்க்) என்று அழைக்கப்படும் மெய்நிகர் தனியார் வலைப்பின்னல் மூலமாக அந்த போலியான கணக்கை பயன்படுத்தி வந்ததாக தெரியவந்தது.

மேலும் அந்த வி.பி.என். வலைப்பின்னல் நைஜீரியா நாட்டில் இருந்து இயக்கப்படுவதாக தெரியவந்தது. இதையடுத்து போலி கணக்கு தொடங்கிய மற்ற 2 செல்போன் எண்களை குறித்தும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த போலி கணக்குகளும் நைஜீரியா நாட்டில் இருந்து இயக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், இந்த பணம் பறிக்க முயற்சி செய்த மர்ம நபர்கள் யார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உண்மையில் அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்களா? அல்லது வேறு பகுதியில் இருந்தபடி வி.பி.என். வலைப்பின்னல் தொழில்நுட்பம் மூலம் அவ்வாறு மோசடி முயற்சியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com