

சென்னை,
காவிரி நீர் கிடைக்காவிட்டால், காவிரி டெல்டாவின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டத் தொடர்ந்து முயற்சித்து வரும் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தமான நதியா!.. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை 2018-ஆம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டு திருத்தி உறுதிசெய்ததன்படி, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீர் கிடைப்பது சட்டப்பூர்வமான உரிமை!
மேகதாது அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட்டு எந்த நிபந்தனையற்ற அனுமதியையும் வழங்கவில்லை என்பதே உண்மை! காவிரி நீரின் மீது தமிழ்நாட்டின் சட்டரீதியான உரிமைகள் பலமாக உள்ளன.
குறித்த காலத்தில் காவிரி நீர் கிடைக்காவிட்டால், காவிரிடெல்டாவின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும். பயிர்க்காலம் முடிந்த பிறகு வரும் தண்ணீரால் விவசாயிக்கு என்ன பயன்?
தமிழ்நாட்டில் தவெக அரசின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் இந்த அணைத் திட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்கிறது! ஆனால், தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தலாக இருக்கும் இந்த விவகாரத்தில் தவெக அரசு மவுனம் காக்கிறது!
தமிழ்நாடு காங்கிரசின் வாய்ச்சவடால் தலைவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளின் பக்கம் நிற்பார்களா? கர்நாடகாவின் பக்கம் நிற்பார்களா?
ராகுல்காந்தி அவர்களே, தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையைப் பாதிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்ப்பீர்களா இல்லையா !
சி.எம். சார், உங்கள் அரசியல் கூட்டணியைக் காப்பாற்றுவது முக்கியமா? தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவது முக்கியமா?
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த பிரச்சினை குறித்து தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரினார். இது சட்டமன்ற தீர்மானத்தில் திருத்தமாகவும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், டெல்டா விவசாயிகளை முதல்-அமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை த.வெ.க. அரசு எப்போது செய்யப்போகிறது!
பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனையும், எங்களது சட்டப்பூர்வமான காவிரி நீருரிமையையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.