ஊழல் புகார் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் விவாதத்துக்கு வர தயாரா? - மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி சவால்

ஊழல் புகார் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் விவாதத்துக்கு வர தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
ஊழல் புகார் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் என்னுடன் விவாதத்துக்கு வர தயாரா? - மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி சவால்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் சென்னை அசோக்நகரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பி.சத்யா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வாரிசு அரசியலைத்தான் முன்னெடுத்தார்கள். ஆனால் மக்களை வாரிசுகளாக நினைத்தவர் தான் எம்.ஜி.ஆர்.

தி.மு.க. என்பது குடும்ப கட்சி. அ.தி.மு.க. ஜனநாயக இயக்கம். தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அந்த கம்பெனியில் உழைப்புக்கு மரியாதை இல்லை. எங்கு சென்றாலும் அரசு மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் பேசி மக்களை குழப்பி வருகிறார்.

தமிழகத்தில் ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்ற நிலையை நிச்சயம் உருவாக்கி காட்டுவோம்.

எதற்கெடுத்தாலும் அ.தி.மு.க. அரசு ஊழல் செய்துள்ளது என மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இந்த கூட்டத்தின் மூலம் நான் அவருக்கு சவால் விடுகிறேன். ஊழல் குறித்து அவருடன் மேடையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அவர் துண்டு சீட்டு இல்லாமல் வர முடியுமா? பேச முடியுமா? இப்படி அறை கூவல் விடுத்தால் போதும், உடனே நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது பேச மாட்டேன் என்கிறார்.

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. தான் என்பதை நாடு மறக்காது. தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் பலர் ஊழல் புகாரில் சிக்கினார்கள். இதை மு.க.ஸ்டாலின் புரிந்து கொண்டு பேச வேண்டும்.

எங்களுக்கு மடியில் கனமில்லை. எனவே வழியில் பயமில்லை. தற்போது 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். மு.க ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் ஜெயிக்கலாம். நிஜத்தில் அவர் ஜெயிக்கவே முடியாது.

எப்போதுமே தர்மம் நீதி தான் வெல்லும். குறுக்குவழி வென்றதாக சரித்திரம் கிடையாது. எனவே உண்மை பேசி மக்களை சந்தித்தால் ஒரு வேளை தி.மு.க. எதிர்க்கட்சியாக வரலாம். எந்த காலத்திலும் அ.தி.மு.க.வை வெல்லும் சக்தி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் ப.வளர்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com