பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறீர்களா விஜய்? - உதயநிதி ஸ்டாலின் தாக்கு

ஆபாச குறுஞ்செய்தி விவகாரம் கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கத்தான் ஆட்சி நடத்துகிறீர்களா விஜய்? - உதயநிதி ஸ்டாலின் தாக்கு
Published on: 

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா முதல்-அமைச்சர் விஜய்?...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தியை அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய ஆங்கில நாளிதழ் செய்தி. இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று ஐகோர்ட்டிலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதல்-அமைச்சருக்கு தெரியாதா?. அதை முதல்-அமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?.

இதில் எது உண்மை என்பதை முதல்-அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதல்-அமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும். அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X