

நாகப்பட்டினம்,
ஏசி, டிவி வேலை செய்யாததால் லாட்ஜ் ஊழியரை அடித்து கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த சஞ்சீவி மற்றும் அவரது நண்பர்கள் சிலர், கடந்த செப்டம்பர் 18-ந்தேதி வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது, அறையில் இருந்த ஏசி மற்றும் டிவி வேலை செய்யவில்லை எனக் கூறி, அங்கு பணியாற்றி வந்த மகேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் மகேந்திரனை சரமாரியாகத் தாக்கியது. இதில், அவர் படுகாயமடைந்தார். பின்னர், பலத்த காயமடைந்த மகேந்திரனை அதே அறைக்குள் தள்ளி, வெளிப்புறமாக பூட்டிவிட்டு, தங்களது காரில் அந்தக் கும்பல் தப்பிச் சென்றது.
இதையடுத்து, அறைக்குள் பூட்டப்பட்டு கிடந்த மகேந்திரனை மீட்டு போலீசார் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, விடுதி ஊழியரைத் தாக்கிவிட்டு, அறையை பூட்டிக் கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இதுகுறித்து மகேந்திரனின் மனைவி அளித்த புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான சஞ்சீவி மற்றும் அவரது நண்பர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.