

சேலம்,
சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவருடைய மகள்கள் திவ்யபாரதி (வயது 17), ரமணி (14). இவர்கள் சுக்கம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே பிளஸ்-2 மற்றும் 9-ம் வகுப்பு படித்தனர். நேற்று காலை அவர்கள் பள்ளிக்கு சென்றனர். பின்னர் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பினர். இதையடுத்து செல்போன் பார்ப்பதில் அக்காள், தங்கை இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த திவ்யபாரதி வீட்டில் இருந்த ஒரு அறைக்கு சென்று கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி திவ்யபாரதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் மாணவி உடலை மீட்டு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.