'அரிக்கொம்பன்' யானை சிக்காததால்கம்பம் வனத்துறை அலுவலகத்தில் காத்திருக்கும் கும்கி யானைகள்

அரிக்கொம்பன் யானை சிக்காததால் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் கும்கி யானைகள் காத்திருக்கின்றன.
'அரிக்கொம்பன்' யானை சிக்காததால்கம்பம் வனத்துறை அலுவலகத்தில் காத்திருக்கும் கும்கி யானைகள்
Published on

தேனி மாவட்டத்திற்குள் 'அரிக்கொம்பன்' யானை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை பிடிப்பதற்காக கடந்த 28-ந் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கோவை மாவட்டம் டாப் சிலிப்பில் இருந்து லாரி மூலம் தனித்தனியாக கொண்டுவரப்பட்டன. பின்னர் அவை கம்பத்தில், கூடலூர் சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள புளியந்தோப்பில் நிறுத்தப்பட்டன. இங்கு கும்கி யானைகளை பார்ப்பதற்காகவும், அதனுடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கும்கி யானைகள் கம்பம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு 3 கும்கி யானைகளும் தனித்தனியாக நிறுத்தப்பட்டு பாகன்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அரிக்கொம்பன் யானை தற்போது உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது. அந்த யானை வனத்துறையினரிடம் சிக்காமல் உலா வருகிறது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திய பிறகு தான் கும்கி யானைகளுக்கு வேலை என்பதால் கும்கி யானைகள் கடந்த 5 நாட்களாக கம்பம் வனத்துறை அலுவலகத்திலேயே உள்ளன. கும்கி யானையுடன் பாகன்கள் மற்றும் வனத்துறையினரும் உள்ளனர். இந்த கும்கி யானைகளை கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்தின் வெளியில் இருந்து பார்த்து செல்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com