அயர்ந்து தூங்கும் அரிக்கொம்பன் யானை- சமூக வலைதளங்களில் வீடியோ பரவுகிறது

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை அயர்ந்து தூங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வனப்பகுதியில் அயர்ந்து தூங்கிய அரிக்கொம்பன் யானை
வனப்பகுதியில் அயர்ந்து தூங்கிய அரிக்கொம்பன் யானை
Published on

நாகர்கோவில்,

கேரளாவில் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியிலும், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் மற்றும் குமுளி ஆகிய இடங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் லாரி மூலம் யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் விட்டனர்.

அரிக்கொம்பன் யானை விடப்பட்ட பகுதியானது குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணைக்கு மேல் உள்ள இயற்கை எழில்கொஞ்சும் முத்துக்குழிவயல் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இதன் காரணமாக அப்பர் கோதையாறில் இருந்து அாக்கொம்பன் யானை குமரி மாவட்ட வன பகுதிக்குள் நுழைந்து காணியின மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் வந்து விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.

எனவே யானையின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அதாவது அரிக்கொம்பன் யானையின் காதில் பொருத்தப்பட்டு உள்ள ரேடியோகாலர் எனப்படும் எலக்ட்ரானிக் கருவியை பயன்படுத்தி ஜி.பி.எஸ். மூலம் வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல்நிலை, நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். குமரி மாவட்ட வனத்துறையினரும் சுமார் 40 பேர் முத்துக்குழிவயலில் முகாமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் யானையின் காதில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் கருவியில் இருந்து போதிய தகவல் வரவில்லையெனவும், அது செயல் இழந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. மேலும் யானைக்கு செலுத்தப்பட்ட மயக்க ஊசியின் வீரியம் முற்றிலும் தணிந்து விட்ட நிலையில், யானை அதன் முழு பலத்தை பெற்றுள்ளது என்றும் கூறப்பட்டது. இதையடுத்து யானை வந்துவிடுமோ? என அச்சத்தில் மேல் கோதையாறில் 3 போலீஸ் சோதனை சாவடிகள் மற்றும் கீழ்கோதையாறில் மின் நிலையம் 1, மின்நிலையம் 2 மற்றும் வால்வு கவுஸ் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மணிமுத்தாறு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த போலீசார் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் அப்பர் கோதையாறு பகுதியில் எங்கும் பசுமை நிலவுவதால் அரிக்கொம்பன் யானைக்கு நல்ல உணவு கிடைக்கிறது. மேலும் அருகே குற்றியாறு அணை இருப்பதால் அங்கு சென்று தண்ணீர் குடித்து நன்றாக இளைப்பாரி வருகிறது. இந்த நிலையில் அரிக்கொம்பன் யானை உண்ட மயக்கத்தில் புல்வெளியில் படுத்து அயர்ந்து தூங்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லேசாக மழை சாரல் விழும் நிலையிலும் யானையானது புல்வெளியில் படுத்து உறங்கியது. இதை வைத்து பாக்கும் போது அப்பர் கோதையாறு வன சூழல் அரிக்கொம்பன் யானைக்கு ஏதுவானதாக அமைந்து விட்டதாகவும், எனவே இனி குடியிருப்பு பகுதிக்குள் வர வாய்ப்பு இல்லை என்றும் வனத்துறையினர் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com