

மதுரை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியதாவது:-
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அழுத்தம் காரணமாக நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற திமுக அரசு தவறிவிட்டது. தனி நீதிபதி உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை. இருப்பினும் அமல்படுத்தாமல் தடுக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்த நிலை பின்பற்றப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். இதை கடுமையாக கண்டிக்கிறோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு, திமுகவை பின்பற்றுகிறது. தவெக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். சாதி, மத பிரச்சினைகளை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவது திமுகவின் வேலை.
தவெக ஆட்சியில் இந்து சமயம் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது. சபாநாயகர் சட்டப்பேரவையில் பைபிள் படிக்கிறார். அவர் பகவத் கீதையையும் படிக்க வேண்டும். அப்படி நடந்தால் இது மதசார்பற்ற அரசு என நம்புவோம். முதல்-அமைச்சர் விஜய் திருச்செந்தூர், கொல்லூர் கோயில்களுக்கு செல்கிறார். தான் எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என வெளியே நிலைநாட்ட நினைக்கிறார். ஆனால் நடப்பது வேறு விதமாக உள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்ததாலும் போதைப் பொருள் நடமாட்டம், பெண்களுக்கு பாதுாப்பில்லாத சூழல் உள்ளது. தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படை தவெகவினரை கைது செய்து வருகிறது. திமுக ஆட்சியில் என்ன நடந்தது அது இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. தவெக அரசு ரீல்ஸ் அரசாக உள்ளது. இந்து மாணவர்களுக்கும், இந்துக்களுக்கும் சலுகை வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் கிறிஸ்த ஊழியர்கள் நிரம்பி வழிகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.