முருகன், நளினிக்கு பரோல் கிடைக்கும் அர்ஜூன் சம்பத் பேட்டி

வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்தார். பின்னர் முருகனுக்கும், நளினிக்கும் பரோல் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
முருகன், நளினிக்கு பரோல் கிடைக்கும் அர்ஜூன் சம்பத் பேட்டி
Published on

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார். அவரை நேற்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் கூறியதாவது:-

பரோல் கிடைக்கும்

முருகன் கடந்த சில மாதங்களாக ஆன்மிகத்தில் ஈடுபட்டு தவவாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் சிறையிலேயே முக்திபேறு அடைவதற்கான முயற்சிகள் மேற்கொண்டார். ஆன்மிகத்தில் இது இயற்கையாக வரக்கூடியது. ஆனால் சிறை சட்டதிட்டத்தின்படி இது சரியாக இருக்காது.

தற்போது காலங்களும், சூழ்நிலைகளும் மாறிவிட்டன. பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்துள்ள நிலையில் முருகன், நளினிக்கும் பரோல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முருகன் 18 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்ட அவர் மவுன விரதத்தை தொடர்ந்தார்.

இந்திய இறையாண்மைக்கு எதிரானது

இன்று நான் அவரை சந்தித்து மவுனவிரதத்தை கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதன்பேரில் அவர் மவுனவிரதத்தை கைவிட்டு என்னுடன் பேசினார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் இந்திய மண்ணை சேர்ந்தவர்கள். அவர்கள் கண்டிப்பாக இந்திய மண்ணில் விடுதலை செய்யப்படுவார்கள்.

ஈழத்தமிழர்கள் போராட்டம் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டுவிட்டது. அதற்கு திராவிட இயக்கங்கள்தான் காரணம். ஜெனிவாவில் பேசிய இயக்குனர் கவுதமன் ஈழவிடுதலை பற்றி பேசாமல், நீட்தேர்வு, நவோதயா பள்ளி பற்றி பேசியிருக்கிறார். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

எனவே அவருடைய பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும். அதே போன்று மே 17 இயக்கமும் பிரிவினைவாத அரசியலை நடத்துகிறது. இவர்களுக்கு ஒரு முடிவுகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com