நண்பரை கொன்றவரை தீர்த்து கட்ட ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் கைது - சென்னையில் பரபரப்பு சம்பவம்

சென்னையில் நண்பரை கொன்றவரை தீர்த்து கட்ட ஆயுதங்களுடன் வந்த ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
நண்பரை கொன்றவரை தீர்த்து கட்ட ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் கைது - சென்னையில் பரபரப்பு சம்பவம்
Published on

சென்னை புதுப்பேட்டை அய்யாசாமி தெருவை சேர்ந்தவர் வசீகரன் (வயது 20). இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் தெருவில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பலை சேர்ந்தவர்கள் வசீகரனை சுற்றி வளைத்து தாக்க முயற்சித்தனர். அவர்கள் கையில் பளபளக்கும் பட்டாக்கத்திகள் இருந்தன.

வசீகரனை வெட்டி சாய்க்க அவர்கள் முயற்சித்தனர். ஆனால் வசீகரன் அந்த கும்பலிடம் சிக்காமல் தப்பி ஓடி உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக வசீகரன் எழும்பூர் போலீசில் புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் ரகுபதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திவ்யகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

வசீகரனை கொலை செய்ய முயன்ற அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (29), மாத்யூ (22) மற்றும் பரத் (23), ராஜ்குமார் (27) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மணிமாறன், மாத்யூ ஆகியோர் ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது, மோகன் என்பவரின் கொலை வழக்கில் வசீகரன் சம்பந்தப்பட்டவர் என்பதும், மோகனை கொன்றதற்கு பழிக்குப்பழி வாங்குவதற்காக அவரது நண்பரான மணிமாறன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com