ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி - அதிகாரிகள் பலி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி - அதிகாரிகள் பலி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
Published on

சென்னை,

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். அவருடன் பயணித்த ராணுவ அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்புக்காக தங்களை அர்ப்பணித்து பணியாற்றிய வீரர்கள். இவர்களது மரணம் தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. விபத்தில் உயிரிழந்திருக்கும் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

இந்தியாவின் பாதுகாப்பில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு உயர் பொறுப்புக்கு வந்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். இந்திய ராணுவம் இத்தகைய இழப்புகளை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று தெரியவில்லை. மிகுந்த துயரத்தையும், வேதனையையும் தருகிற இந்த செய்தி நாட்டு மக்களையே உலுக்கியுள்ளது.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் இந்திய விமானப்படை வீரர்கள் 13 பேர் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்கள் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். ஜெனரல் பிபின் ராவத் மறைவு நாட்டிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை:-

தெளிந்த தேச பக்தியும், திறமையும் துணிச்சலும் மிக்க தலைசிறந்த ராணுவ வீரர், பிபின் ராவத். ராணுவ தந்திரங்களிலும், ராணுவ எந்திரங்களிலும் துல்லியமான நுண்ணறிவு மிக்கவர். ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு இந்திய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. வருத்தங்களை பகிர்ந்து கொண்டு உயிரிழந்தோருக்கு அனுதாபங்களை தெரிவிக்கிறேன்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து கண்டறியப்பட்டு, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்:-

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சசிகலா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநில செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.



Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com