விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகள் கிடைக்க ஏற்பாடு... ஈஷா நாற்றுப்பண்ணையில் பயிற்சி

விதைப்பந்துகள் தயாரிப்பது குறித்தும் நேரடிச் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகள் கிடைக்க ஏற்பாடு... ஈஷா நாற்றுப்பண்ணையில் பயிற்சி
Published on: 

கடலூர்,

சத்குருவின் ‘மண் காப்போம்-காவேரி கூக்குரல்’ இயக்கம் மற்றும் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில், ‘விதையிலிருந்து கன்று வரை’ என்ற தலைப்பில் தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்கான இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் களப்பயிற்சி நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கடலூரில் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணையில் நடைபெற்றது.

பயிற்சிகள்

இதில் நாற்றுப்பண்ணை பணியாளர்களுக்கு மர விதைகள் தேர்வு முதல் நாற்றுகளை வளர்த்து பராமரிப்பது வரை பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், குறிப்பாக தரமான விதைகளைத் தேர்ந்தெடுப்பது, அவற்றின் முளைப்புத்திறனை மதிப்பிடுவது, விதைகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பது, விதைகளின் ஈரப்பதத்தைப் பராமரிப்பது மற்றும் விதை நேர்த்தி செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், உடனடியாக விதைக்கக்கூடிய விதைகள், குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் சேமித்து வைத்துப் பயன்படுத்தக்கூடிய விதைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, தாய் படுகையில் விதைகளை விதைக்கும் முறை, நேரடி விதைப்பு, தாய் படுகையில் இருந்து நாற்றுகளை நாற்றுப்பைகளுக்கு மாற்றுவது, இயற்கை முறையில் ஊட்டச்சத்துகளை வழங்குவது மற்றும் நோய், பூச்சித் தாக்குதல்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்தும் செயல்விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. கூடுதலாக குளோனல் தொழில்நுட்பம், திசு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது குறித்த தொழில்நுட்பங்களும் விளக்கப்பட்டன. விதைப்பந்துகள் தயாரிப்பது குறித்தும் நேரடிச் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் IFGTB-இன் முதன்மை விஞ்ஞானி முனைவர் ஆனந்தலட்சுமி, தொழில்நுட்ப அதிகாரி சுரேஷ்குமார், முதன்மை தொழில்நுட்ப அலுவலர்கள் சதீஷ்குமார் மற்றும் மகாலிங்கம் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் காவேரி கூக்குரல் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கினர்.

கடலூர் ஈஷா நாற்றுப்பண்ணை

கடலூரில் அமைந்துள்ள ஈஷா நாற்றுப்பண்ணை, 'காவேரி கூக்குரல்' இயக்கத்தின் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்நாற்றுப்பண்ணை ஆண்டுக்கு சுமார் 85 லட்சம் உயர்தர மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாய நிலங்களில் ஆண்டுக்கு 1.36 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 14 கோடி மரங்கள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X