தூத்துக்குடி பகுதி பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு - அதிகாரிகள் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பகுதி பாசனத்திற்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு - அதிகாரிகள் தகவல்
கோப்புப்படம்
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட பாசனத்துக்காக பாபநாசம் அணையில் இருந்து 27-ந் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் விஷூமகாஜன் மற்றும் அதிகாரிகள் பேசினர். அப்போது அதிகாரிகள் கூறியதாவது:-

திருச்செந்தூரில் மாதம் தோறும் கோட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் முறையாக நடத்தப்படும். வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் மானியத்தில் எந்திரங்கள் வழங்க பணம் கேட்பதாக மிகவும் சீரியசான புகாரை கூறி உள்ளீர்கள். இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் முறையாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும். அதன் மீது தனி அதிகாரி நியமித்து விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் மீது ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனுக்குடன் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தண்ணீர் திறப்பு

வெள்ளமடம் பகுதியில் விளை நிலம் இல்லாத பகுதிகளில் தான் சிப்காட் அமைக்க இடம் தேர்வு செய்யப்படும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்து கொள்ளப்படும். அணைகளில் தற்போது 37சதவீதம் தான் தண்ணீர் உள்ளது. இருப்பினும் மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்காக வருகிற 27-ந் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி கிடைத்து 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். நேரடி பாசன பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படும். மழை பெய்து அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றால் குளங்களுக்கும், மறைமுக பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

வடிகால்கள், தனிக் கால்வாய், மடை பகுதிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். தென்கால் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வண்ணான்குளத்தில் விதிகளை மீறி மணல் எடுத்திருப்பதாக கூறப்படுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஆலைக்கு தாமிரபரணியில் இருந்து உபரி நீர் தான் செல்கிறது. அதில் விதிமீறல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

X