

சென்னை,
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் புத்தாடை இனிப்பு, பட்டாசு முக்கிய அங்கம் வகித்தாலும் மதுபானங்களும் ஒரு பிரிவினரை மகிழ்ச்சியடைய செய்கிறது.
தீபாவளியை 3 நாடகள் விடுமுறையுடன் கொண்டாட திட்டமிட்டு உள்ள நிலையில் மதுபானங்கள் அதிகளவில் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுயதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முதல் இருப்பு மதுபானங்கள் அதிகளவில் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போதுமான அளவு மதுபானங்களை ஒவ்வொரு கடைகளிலும் இருப்பு வைக்க வேண்டும் என்று மாவட்ட மேற்பார்வையாளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். மது பிரியர்கள் விரும்பி கேட்கின்ற அனைத்து சரக்கு வகைகளும் இல்லை என்று சொல்லாத வகையில் இருப்பு வைத்திருக்க வேண்டும், விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக அளவு இருப்பு வைக்க இட வசதி இல்லை என்று ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதிக விற்பனையாக கூடிய கடைகளில் மது பானங்களை குவித்து வைக்க போதிய இடவசதி இல்லை என்றும் இதனால் மாற்று இடங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கடை ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் திங்கட் கிழமை வரை 4 நாட்கள் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு போனஸ் போடப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்களிடம் பணம் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் விற்பனை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் காலி மதுபாட்டில் விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மது விற்பனை பாதிக்கக்கூடும் என்பதால் தற்காலிகமாக ஊழியர்களை நியமிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. கடந்த 2 நாட்கள் நடந்த போராட்டத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் டாஸ்மாக் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.