‘அரியர் மாணவர்கள் தேர்ச்சி’ அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது - ஐகோர்ட்டில், தொழில்நுட்ப கல்வி குழுமம் பதில் மனு

செமஸ்டர் தேர்வுகள் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது என்று சென்னை ஐகோர்ட்டில், தொழில்நுட்ப கல்விக்குழு தெரிவித்து உள்ளது.
‘அரியர் மாணவர்கள் தேர்ச்சி’ அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது - ஐகோர்ட்டில், தொழில்நுட்ப கல்வி குழுமம் பதில் மனு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தவிர்த்து, மற்ற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்களும் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்ததால் அவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இப்படி கலை, அறிவியல், என்ஜினீயரிங், எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இவரை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்துக்கு உத்தரவிட்டனர். அதன்படி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுமத்தின் விதிகளுக்கு முரணானது.

கொரோனா பேரிடர் காலத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால், இறுதி பருவத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது என்று கூறியுள்ளது.

இந்த வழக்குகள், விரைவில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com