

மதுரையில் இருந்து தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ் நேற்று முன்தினம் தேக்கடி சோதனைச்சாவடியில் கேரள வனத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு தமிழக விவசாய சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே கம்பத்தில் இருந்து தேக்கடி செல்லும் தமிழக அரசு பஸ்சில் விவசாய சங்கத்தினர் சிலர் ஏறி, தேக்கடியில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடியை முற்றுகையிட போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உத்தமபாளையம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு தேக்கடி செல்லும் அரசு பஸ்சில் ஏறி செல்ல முயன்றதாக மாவட்ட பா.ஜ.க. விவசாய அணியை சேர்ந்த நிர்வாகிகள் ரவிக்குமார், ராமர், ரவி, சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல் குமுளியில் இருந்து தேக்கடிக்கு செல்ல முயன்ற பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு, கூடலூர் முல்லை சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், துணைத்தலைவர் ராஜா, பொருளாளர் ஜெயபால் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி, லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.