தடையை மீறி ஜல்லிக்கட்டு நாம்தமிழர் கட்சியினர் உள்பட 28 பேர் கைது

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம்தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நாம்தமிழர் கட்சியினர் உள்பட 28 பேர் கைது
Published on

கடலூர்,

மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்தநிலையில் கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயலில் ஜல்லிக்கட்டு

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் இருந்து திருமாணிக்குழி செல்லும் பாதையில் தனியாருக்கு சொந்தமான வயல் வெளியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மேடுபள்ளம் சரிசெய்யப்பட்டு சவுக்கு கட்டைகளால் வாடிவாசல் மற்றும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 7 மணியளவில் ஒரு லாரியில் 4 காளைமாடுகளை அங்கு கொண்டு வந்தனர். லாரியில் 24 இளைஞர்களும் வந்தனர். தடுப்பு வேலியை சுற்றிலும் நாம்தமிழர் கட்சியினரும், கிராம மக்களும் நின்று கொண்டிருந்தனர்.

காலை 8.15 மணியளவில் வாடிவாசல் வழியாக காளை மாடு தடுப்பு வேலிக்குள் சீறிப் பாய்ந்தது. அதை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவராக சென்று அடக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் பிடிகொடுக்காமல் காளை திமிறியபடி அங்கும் இங்குமாக ஓடியது. இதைப்பார்த்து வேலியை சுற்றி நின்ற பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவது பற்றி தகவல் அறிந்ததும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்து 4 காளைமாடுகளும், அதனுடன் வந்தவர்களும் லாரியில் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் மட்டும் அங்கு நின்றிருந்தனர்.

அப்போது தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு மற்றும் கடலூர் மாவட்ட, நகர நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த தாஸ் என்பவருக்கு சொந்தமான 4 காளைகளும், அவற்றுக்கு பாதுகாப்பாக அதே பகுதியைச் சேர்ந்த 24 இளைஞர்களும் லாரியில் அழைத்து வரப்பட்டதாகவும், போட்டி முடிந்ததையடுத்து அவர்கள் திருவந்திபுரம்-பண்ருட்டி சாலை வழியாக ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

காளைகளுடன் லாரி பறிமுதல்

இதையடுத்து பண்ருட்டி அருகே உள்ள பாலூரில் சென்று கொண்டிருந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த காளை மாடுகளின் உரிமையாளர் தாஸ்(வயது 27), அவருடன் வந்த ஆரோக்கியராஜா, சிரில், பாபு ஜேசுராஜ், சுரேஷ்குமார், பொன்னார், ஷாருக்கான், விக்னேஷ், ஜெயகுமார் உள்ளிட்ட 24 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 4 காளைகளும், அவற்றை கொண்டு வந்த லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சினிமா படப்பிடிப்பு

திருவந்திபுரம் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்த சம்பவம் போலீசாருக்கோ, உளவுத்துறைக்கோ முன்கூட்டியே தெரியவில்லை. மேலும் ஜல்லிக்கட்டு நடந்த இடம், திருவந்திபுரத்தில் உள்ள சிறிய மலை பகுதியாக இருந்ததால் இப்படி ஒரு ஏற்பாடு நடந்து வருவது வெளியே பலருக்கு தெரியவில்லை.

அங்கு நடைபெற்ற ஏற்பாடுகளை பார்த்து அந்த வழியாக சென்ற கிராம மக்கள் கேட்டபோது, இங்கே சினிமா படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதனால் தடுப்பு வேலி அமைக்கிறோம் என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பதில் கூறியதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினர். ஏற்கனவே அந்த பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடந்து இருப்பதால் அவர்கள் சொன்னதை உண்மை என கிராம மக்கள் நம்பி விட்டனர்.

மாணவர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக கைது செய்யப்பட்ட நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 4 காளைமாடுகளுடன் லாரியையும் விடுவிக்க கோரி கடலூர் மஞ்சக்குப்பம் பாரதிசாலை, பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை சந்திப்பில் நாம்தமிழர் கட்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கடலூர்-புதுச்சேரி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விடுதலை

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக கைதான 28 பேரும் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் 28 பேரும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 4 காளை மாடுகளும் கடலூர் அருகே கீழ்அழிஞ்சிபட்டில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com