தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற வழக்கில் கைதானவர்: இலவசமாக கபசுர குடிநீர் வழங்க ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு நூதன தீர்ப்பு

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற வழக்கில் கைதானவர், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்க ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நூதன நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற வழக்கில் கைதானவர்: இலவசமாக கபசுர குடிநீர் வழங்க ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் - ஐகோர்ட்டு நூதன தீர்ப்பு
Published on

சென்னை,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவர், ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் மருதாச்சலமூர்த்தி, நிபந்தனை அடிப்படையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு குற்றவியல் வக்கீல் டி.சண்முகராஜேஷ்வரன், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இந்த புகையிலையை பயன்படுத்துபவர்கள், அதை சுவைத்து விட்டு பொது இடங்களில் எச்சில் துப்புவார்கள். ஏற்கனவே குமாரபாளையத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ளது. கட்டுப்பாட்டு பகுதி என்று 6 பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, மனுதாரர் தன் சொந்த செலவில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இலவசமாக வழங்கினால் என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு இருதரப்பும் சம்மதம் தெரிவிக்க, நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை நீதிபதி வழங்கினார். அதில், குமாரப்பாளையத்தில் உள்ள அட்சயம் அறக்கட்டளைக்கு ரூ.50 ஆயிரத்தை மனுதாரர் வழங்க வேண்டும். அந்த தொகையை கொண்டு அந்த அறக்கட்டளை பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com