

நெல்லை,
செங்கோட்டையில் தொழில் தொடங்க ரூ.1 கோடி கடன் தருவதாக கூறி பண மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் தொழில் தொடங்குவதற்காக செல்வராஜ் என்பவர் மூலம் அவருக்கு தெரிந்த தென்காசி மாவட்டம் நன்னகரத்தை சேர்ந்த நாகூர் மீரான் என்பவரிடம் ரூ.1 கோடி கடன் கேட்டு இருந்தார். அவரும் கடன் தருவதாக கூறினார்.
ஆனால் அதற்கு முன்பணமாக ஈசாக் மொய்தின் அலி என்பவர் வங்கி கணக்குக்கு 2 முறை தலா ரூ.70 ஆயிரத்தை அனுப்ப கூறியதன்பேரில் குமார் கடந்த 2023-ம் ஆண்டு அனுப்பி வைத்தார். மேலும் நாகூர் மீரான் வீட்டுக்கு சென்று அவரிடம் சுமார் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆனால் அதன்பின்னர் ரூ.1 கோடி கடன் தரவில்லையாம். இதுகுறித்து குமார் கேட்ட போது, “உனக்கு கடன் தர முடியாது. நீ கொடுத்த பணத்தையும் திருப்பி தர முடியாது" எனக்கூறி இனி பணம் கேட்டு ஊருக்கு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குமார் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கடந்த ஆண்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் ஈசாக் மொய்தின் அலியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.