விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

விராலிமலை முருகன் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளையொட்டி அம்புபோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
விராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
Published on

நவராத்திரி விழா

விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டு தோறும் தைப்பூசம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம் உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் நவராத்திரி விழாவும் 10 நாட்கள் நடைபெறும். இதனையடுத்து இந்த ஆண்டு நவராத்திரி 10 நாள் விழாவானது கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் மலைமேல் உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலு பொம்மைகள் அமைத்து விநாயகர் பூஜையுடன் நவராத்திரி முதல் நாள் விழாவானது தொடங்கியது. அன்று முதல் தினமும் முருகன் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வந்தது.

அம்பு போடுதல் நிகழ்ச்சி

இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு இன்று முருகன் வள்ளி-தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார். பின்னர் அம்புபோடுதல் நிகழ்ச்சி சோதனைச்சாவடி அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவரங்குளம்

திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்மன் சமேத அரங்குளநாதர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அம்மன் அசுரனை வதம் செய்ய பக்தர்கள் புடை சூழ தேரோடும் நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக வந்தார். பின்னர் ஊரின் எல்லைக் பகுதியில் அசுரனை வதம் செய்யும் விதமாக அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரிமளம்

அரிமளம் பேரூராட்சி பகுதியில் உள்ள சிவன் கோவில், வடகலை சீனிவாசபெருமாள், தென்கலை சுந்தரராஜபெருமாள், சேத்து மேல் செல்ல அய்யனார், முத்து பாலுடையார், சுப்பிரமணியர், முத்துமாரியம்மன் ஆகிய கோவில்களில் நவராத்திரி நிறைவு விழாவினையொட்டி சுவாமி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் இருந்து சுவாமிகள் வெள்ளி குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக வாகனங்களில் அழைத்து வரப்பட்டது. அதன் பின்னர் மகர்நோன்பு திடலில் உள்ள மண்டபத்தை சுவாமிகள் 3 முறை வலம் வந்து அங்கு உள்ள வன்னி மரத்திற்கு கோவில் பூசாரிகள் பூஜை செய்து பின்னர் கிழக்கு திசை பார்த்து நான்கு திசைகளிலும் அம்பு போடப்பட்டது. பின்னர் மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் அம்புகள் போடப்பட்டது. பின்னர் சுவாமிகள் அந்தந்த கோவிலுக்கு திருப்பி அழைத்துச் செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com