வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
Published on

அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 3 மையங்களில் நடைபெற்றது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் கவின் கலை, நுண்கலை நாடகம், மொழித்திறன், இசை வாய்ப்பாட்டு, கருவி இசை நிகழ்ச்சி, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் பொறுப்பு ஏற்று நடத்தினர்.

ஒவ்வொரு வகை போட்டிகளுக்கும் தனித்தனியாக நடுவர்கள் குழு அமைக்கப்பட்டு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். போட்டிகள் நடைபெறும் அனைத்து பள்ளிகளிலும் வட்டார கல்வி அலுவலர் சாந்தி ராணி மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த போட்டிகளில் மாணவ-மாணவிகள் பல்வேறு வேடமணிந்து தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 18-ந் தேதி தொடங்கிய கலைத்திருவிழா நேற்று வரை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி தலைமை தாங்கினார். இதில், 43 பள்ளிகளில் இருந்து 4 ஆயிரத்து 77 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒன்றிய அளவில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள். இதையடுத்து, மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் தமிழக அரசின் சார்பில் வெளிநாட்டு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com