கோழிப்பண்ணையில் ஓவிய ஆசிரியர் படுகொலை: மர்ம நபர்களை தேடும் போலீசார்

முதற்கட்ட விசாரணையில், சம்பவத்திற்கு முன்பு புகழேந்தியை 3 பேர் கோழிப்பண்ணையில் துரத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.
படுகொலை
Published on: 

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டம் பெரிய திருகோணம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி (50). இவர் கல்லகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெரியம்மாபாளையம் சாலையில் உள்ள தனது உறவினர் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

போலீசார்

அதன்படி, சம்பவத்தன்றும் கோழிப்பண்ணைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், கோழிப்பண்ணையில் புகழேந்தி கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குன்னத்தைச் சேர்ந்த மணிகண்டன் (35), சிவசூரியா (30), அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ஆகிய 3 பேர், சம்பவத்திற்கு முன்பு புகழேந்தியை கோழிப்பண்ணையில் துரத்தியதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் 3 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மணிகண்டன், சிவசூரியா, நவநீதகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டு விசாரணை நடத்தப்பட்ட பின்னரே, புகழேந்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

கோழிப்பண்ணையில் அரசு பள்ளி பகுதி நேர ஓவிய ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com