செயற்கை நுண்ணறிவு, தமிழ் மொழி வளர்ச்சி : நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

உயிருக்கு நிகரான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக இந்த அரசு அறிவித்துள்ளது என நிதியமைச்சர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு, தமிழ் மொழி வளர்ச்சி : நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்
Published on

சென்னை,

2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த முறையும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.

இதே நிதியாண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை மற்றும் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வருகிற 20-ந் தேதி அவைக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளை வரலாற்றுப் பெருமை மிகுந்த இந்த சட்டமன்றத்தின்முன் வைப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

1. இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக திகழ்வது மட்டுமின்றி. நாட்டிலேயே இரட்டை இலக்க உயர் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடையும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடே போற்றும் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி, நல்வழி காட்டிய முதல்-அமைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

2. காலத்தை வென்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கினை இம்மாமன்றத்தில் பதிவு செய்து எனது உரையை தொடங்குகிறேன். "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை" இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.

3. வான்புகழ் வள்ளுவரின் வாக்கினைப் பின்பற்றி நானிலம் போற்றும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சி வழிநடத்தப்பட்டு வருகிறது. மகளிர், மழலையர், முதியோர், தொல் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் என கடைக்கோடித் தமிழரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்குபெறும் சூழல் உருவாகியிருப்பது தனிச் சிறப்பாகும். ஏற்றுமதியைப் பெருக்கி, பணவீக்கத்தைக் குறைத்து

உயர் பொருளாதார வளர்ச்சியை அடைந்திட்ட அதே வேளையில் தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரையும் நாம் தொடங்கி இருக்கிறோம். மாநிலமெங்கும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கிட முன்முயற்சிகள் எடுத்திடும் பின்னணியில் தொழிலாளர் நலன் காக்கவும் பெருந்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. மிகப்பெரும் அளவில் வெளிநாட்டுத் தொழில் முதலீடுகளை ஈர்த்திட எடுத்திடும் முயற்சிகளுக்குச் சற்றும் குறையாமல் சிறு, குறுந்தொழில் வளர்ச்சியையும் வழிநடத்தியுள்ளோம்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவு வங்கிக் கடன் உதவி மட்டுமின்றி விண்வெளித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள் மலர்ந்து செழித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் முனைப்பில் நீர்வளம் பெருக்கி உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை நாம் நிகழ்த்திக் காட்டியுள்ளோம். நவீன திறன் பயிற்சிகள் பெற்று உலகை வெல்லும் தமிழக இளைஞரை உருவாக்கிட நாம் வடிவமைத்த முன்னோடித் திட்டங்கள் அடைந்த வெற்றி, உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைத் தமிழ்நாட்டிற்கு வருகை புரியவும் வைத்துள்ளன.

4. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் நம் இளைஞர்கள் சிறந்து விளங்கிட உரிய திட்டங்கள் தீட்டப்படும் அதே வேளையில் தமிழர்தம் தொன்மையினை அடுத்த தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை அழகுற வடிவமைத்துள்ளோம்.

மாவட்டந்தோறும் மாபெரும் தொழிற் பூங்காக்கள், நான்குவழிச் சாலைகள், மேம்பாலங்கள் எனும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறும் தமிழ் நிலப்பரப்பில், வனவிலங்குகள், பறவைகள் சரணாலயங்கள் மற்றும் கடல்வாழ் உயிரினப் பாதுகாப்பு, அதிகரிக்கும் வனப்பரப்பு என பசுமை வழிப் பயணத்திற்கும் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழர் நலன் கருதி நாம் உருவாக்கும் நலத் திட்டங்கள் பலவற்றை பிற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கி இருப்பதால், மக்கள் நல அரசுக்கான இலக்கணத்தை வகுத்திடும் வகையில் நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையினை நாம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம்.

5. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே ஓர் வரவு-செலவுத் திட்டம் எப்படி அமைந்திட வேண்டும் என்று நமக்கு வழிகாட்டிச் சென்றிருப்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். "தீட்டப்பட்ட திட்டம் ஒன்றிற்குத் தேவையான நிதி வாயில்களை எந்த வழியில் திரட்ட முடியும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, வேண்டிய நிதி வசதிகள் தற்போது காணப்படவில்லை என்பதால், திட்டச் செலவையும், வளர்ச்சி விரைவையும் குறைப்பது முறையாகாது. ஆக்கப் பணிகளை நிறைவேற்றும் வேகம் சிறிதும் குன்றாத, திட்டமிட்ட வளர்ச்சிக்கு நம்முடைய வரவு-செலவுத் திட்டம் ஒரு கருவியாக இருக்க வேண்டும்.

கடந்த 1971-72 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்த முத்தமிழறிஞர் கலைஞரின் அறிவுரையினை நாம் வழுவாது பின்பற்றி வருவதால் தான், இன்று பல்வேறு துறைகளில் நாட்டிலேயே பெரு வளர்ச்சி பெற்று தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

6. ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒருபுறம் உலக வர்த்தகச் சூழலில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் மறுபுறம் என சவால்கள் பலவற்றைச் சந்தித்து வந்தபோதிலும் நம் முன்னோர் வகுத்துத் தந்த சமூக நீதிப் பாதையில் வழுவாது பயணித்திட நம்மை தொடர்ந்து வழிநடத்துவது பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வைதான்.

தமிழ் மொழி வளர்ச்சி

7. முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வான்புகழ் வள்ளுவருக்கு அமைக்கப்பட்ட திருவுருவச் சிலைக்கு பேரறிவுச் சிலை' எனப் பெயரிட்டு அறிவித்தவர் நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள். உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் இலக்குடன், ஐக்கிய நாடுகள் அவையினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய, நம் உயிருக்கு நிகரான 'தமிழ்த்தாய் வாழ்த்தை' தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக இந்த அரசு அறிவித்துள்ளது.

8. தமிழ்மொழியின் பல்துறை வளங்களைச் செழிக்கச் செய்வதற்கான தொலைநோக்குத் திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. பிறமொழி ஆதிக்கங்களில் இருந்து தமிழைக் காத்தல் மற்றும் செழுமையான தமிழ்ப் படைப்புகளைத் தொடர்ந்து உருவாக்குதல் ஆகிய பணிகளை பெரும் முனைப்போடு இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. பிறமொழித் திணிப்பால் தமிழுக்கு வந்த இடரினை எதிர்த்துப் போராடி, தங்கள் இன்னுயிர் ஈந்த மொழித்தீரர்களின் தியாகத்தைப் போற்றும் வண்ணம், ஜனவரி திங்கள் 25 ஆம் நாளை 'தமிழ்மொழித் தியாகிகள் நாளாக இந்த அரசு கடைப்பிடித்திட ஆணையிட்டுள்ளது.

9. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழில் மொழிபெயர்த்தல் போன்றே, தமிழில் வெளியான சிறந்த நூல்களை ஆங்கிலம் முதலான அயல்மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியான 'திசைதோறும் திராவிடம்' திட்டத்தின் கீழ், இதுவரை 74 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவம். பொறியியல் முதலான கல்விசார் அறிவூட்டும் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் 'முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின்' கீழ், 160 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெரியாரின் சிந்தனைகளை அயல்மொழிகளில் வெளியிடும் முயற்சியில், இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு, அரபு, இந்தி, குஜராத்தி முதலான 21 மொழிகளில் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படைப்புகளை எளிய தமிழில் மொழி பெயர்த்து மக்கள் பதிப்பாக வெளியிட முடிவு செய்து, இதுவரை 27 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

10. தேமதுரத் தமிழோசை அகிலமெலாம் ஒலிக்கும் வகையில், 42 உலக நாடுகளில் 202 தொடர்பு மையங்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து இணையவழித் தமிழ்க்கல்வி வழங்கப்படுகிறது. கணித்தமிழை வளர்த்தெடுக்கும் முன்னோடி முயற்சியாக, இந்தியாவில் வேறெந்த மாநிலமும் செய்திராத வகையில், பன்னாட்டுக் கணித்தமிழ்க் கருத்தரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

பண்பாடு

11 தமிழ்நாட்டின் பண்பாட்டுச் செழுமையையும், பழமையான கலைகளையும், நமது மக்களுக்கு. குறிப்பாக இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்திட பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் கலைகளை வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பரப்பிட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், 'சங்கமம் நம்ம ஊரு திருவிழா' சென்னை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 'சமத்துவப் பொங்கல் விழா' சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.

12. இந்திய அளவில் மட்டுமன்றி உலக அளவிலும், இரும்புத் தாதுவிலிருந்து இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் இருந்தே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக நிலைநாட்டிய முதல்-அமைச்சர் அவர்களின் அறிவிப்பு நாடெங்கும் போற்றப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்களை அழகுற காட்சிப்படுத்த, இந்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவற்றில், உலகத் தரத்திலான கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்கள் ஏற்கெனவே பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அண்மையில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இவை தவிர, தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம், கங்கைகொண்டசோழபுரத்தில் அருங்காட்சியகம், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம், சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒரு புதிய வெண்கல அருங்காட்சியகம் மற்றும் சிந்துவெளி நாகரிக அருங்காட்சியகக் கூடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் என மொத்தம் 285 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பெற உள்ளன.

அயலகத் தமிழர் நலன்

13. புலம்பெயர் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் தேவைகளை நிறைவு செய்வதற்காக, அயலகத் தமிழர் நல வாரியத்தை இந்த அரசு அமைத்துள்ளது. அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் சாதனை, பண்பாடு மற்றும் தாயகத்துடனான பிணைப்பைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அயலகத் தமிழர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டு, 'தமிழால் இணைவோம் தரணியில் உயர்வோம்' என்ற கருப்பொருளில் அயலகத் தமிழர் தினம் கொண்டாடப்பட்டது. வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ்மொழியைக் கற்பிக்கும் இந்த அரசின் முயற்சிகளால், இதுவரை 8 பிற மாநிலங்கள் மற்றும் 14 அயல்நாடுகளில் மையங்கள் தொடங்கப்பட்டு 1,400 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இது தவிர, தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களைக் கொண்டு, தமிழ்மொழியையும், நாட்டுப்புறக் கலைகளையும் பயிற்றுவிக்கும் நேரடி வகுப்புகள் நடத்திடுவதற்கான பணிகளும் 10 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.

14. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களுடன் அயலகத் தமிழர்களின் தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் குடியேறிய பழந்தலைமுறைகளைச் சார்ந்த தமிழர்களில் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பண்பாட்டு பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை இத்திட்டத்தின் கீழ், ரீயூனியன் தீவுகள், தென் ஆப்ரிக்கா, உகாண்டா, பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவுகள், கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை, பிரான்சு, ஜெர்மனி, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகிய 16 நாடுகளில் இருந்து 292 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா, வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கலை, பண்பாடு குறித்து விளக்கப்பட்டதன் மூலம், தத்தமது நாடுகளில் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவர்களாக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com