தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்


தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 May 2025 3:30 PM IST (Updated: 12 May 2025 4:17 PM IST)
t-max-icont-min-icon

தரமணியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை

சென்னை, தரமணியில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 'தமிழரசு' அலுவலகம் மற்றும் அச்சக வளாகத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக, ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்" மற்றும் "கருணாநிதியின் மார்பளவுச் சிலை" ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கருணாநிதியால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் தொடங்கப்பட்ட 'தமிழரசு' இதழானது கடந்த 55 ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் தொகுத்து வழங்கி, அரசின் அச்சு ஊடகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் படித்துப் பயன்பெறும் வகையில், முதல்-அமைச்சர் பங்கேற்கும் அரசு விழாக்கள், கள ஆய்வுகள், அவை தொடர்பான செய்தி வெளியீடுகள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், பிற பொதுவான தகவல்கள் அடங்கிய மாத இதழாக 'தமிழரசு' இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள், சட்டமன்ற உரைகள், சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், முதல்-அமைச்சரின் பொன்மொழிகள் போன்ற சிறப்பு வெளியீடுகளும், நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோர்களைப் போற்றும் விதமாகப் பல சிறப்பு மலர்களும் 'தமிழரசு' இதழ் வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த நான்காண்டுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள 54 சிறப்பு வெளியீடுகளில் 19 சிறப்பு மலர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசு மாத இதழினை பொதுமக்கள், அரசு அலுவலகங்கள், அரசு நூலகங்களின் வாசகர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், தமிழ்ச் சான்றோர்கள் அதிக அளவில் படித்துப் பயன்பெறுகின்றனர். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவ, மாணவியர்கள் தமிழரசு அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்தும் இதழினை வாங்கியும் பயனடைகின்றனர்.

முந்தைய ஆட்சிக் காலங்களில் 30,000 ஆக இருந்த தமிழரசு மாத இதழ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்ற இலக்கினை அடைந்ததையொட்டி, அதனைச் சிறப்பிக்கும் வகையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 17.5.2023 அன்று 1 லட்சத்து 1-வது சந்தாதாரருக்குத் தமிழரசு மாத இதழை வழங்கிப் பாராட்டினார்.

கருணாநிதியால் தோற்றுவிக்கப்பட்டு, பல்வேறு பெருமைகள் கொண்டுள்ள 'தமிழரசு' இதழ் 55-வது ஆண்டினை நிறைவு செய்யும் தருணத்தில், 6.6.2023 அன்று நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வுக் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் ஆலோசனையின்படி, தரமணியிலுள்ள தமிழரசு அச்சக வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக "கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்" மற்றும் "கருணாநிதியின் மார்பளவுச் சிலை" ஆகியவற்றை அமைத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.25 லட்சம் செலவில் கருணாநிதி நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட்டுள்ள, "கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்" மற்றும் "கருணாநிதியின் மார்பளவுச் சிலை" ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தமிழரசு இதழ் துவங்கப்பட்ட காலந்தொட்டு, இதுநாள் வரையிலான தமிழரசு இதழின் வெற்றிப்பயணங்களின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தப் புகைப்படக் கண்காட்சியில் தமிழரசு இதழில் வெளியிடப்பட்ட, சிறப்பு வெளியீடுகளின் முகப்பு அட்டைகள், புகைப்படங்கள், கருணாநிதி எழுதிய வாழ்த்து மடல், கடிதங்கள் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களின் புகைப்படங்கள், முகப்பு அட்டைகள் ஆகியவைகளும் உள்ளடங்கி இருந்தன. இதனை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதன்பிறகு, தமிழரசு அச்சகத்திற்கு சென்று, தமிழரசு இதழ் அச்சடிக்கும் பணிகளையும், அங்கு பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களையும் பார்வையிட்டு, இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story