கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 3 நாள் சிறப்பு முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள், நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 3 நாள் சிறப்பு முகாம்
Published on

சென்னை,

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24-ந் தேதியன்று தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

முதற்கட்டமாக 20 ஆயிரத்து 765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2-ம் கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற்றன. 2-ம் கட்ட முகாமில் 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 1.54 கோடி விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட நபர்கள், நாளை முதல் 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வராதவர்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. அத்துடன், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதிவாய்ந்த மகளிர் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள், 3 நாட்கள் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com