

மீனவர்கள் மீது தாக்குதல்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மகன்கள் சிவா, சிவக்குமார். மீனவர்களான இவர்கள் 3 பேரும் கடந்த 24-ந்தேதி இரவு கடலில் கோடிக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி, இரும்பு பைப்பு உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்கள் 3 பேரையும் சரமாரியாக தாக்கி அவர்களிடம் இருந்து 300 கிலோ வலை, டார்ச்லைட், வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் சிவக்குமார், சிவா, சின்னதம்பி ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். பின்னர் நேற்று முன்தினம் காலை இவர்கள் கரை திரும்பினர். இதை தொடர்ந்து காயம் அடைந்த 3 மீனவர்களும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு
ஆறுகாட்டுத்துறை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து நேற்று 2-வது நாளாக ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.வேலை நிறுத்த போராட்டத்தால் 500-மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஞாயிற்றுக்கிழமைகளில் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதி நேற்று வெறிச்சோடி கிடந்தது.