மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - மாசி வீதிகளில் பஞ்ச சபைகளின் நடராஜர் நாளை உலா

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இதையொட்டி மாசி வீதிகளில் பஞ்ச சபைகளின் நடராஜர் நாளை உலா வருகிறார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா - மாசி வீதிகளில் பஞ்ச சபைகளின் நடராஜர் நாளை உலா
Published on

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இதையொட்டி மாசி வீதிகளில் பஞ்ச சபைகளின் நடராஜர் நாளை உலா வருகிறார்.

ஆருத்ரா தரிசனம்

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு உகந்த மார்கழி மாதத்திருவாதிரை தினத்தன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான விழா இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு தொடங்கி நாளை (6-ந் தேதி) அதிகாலை வரை நடைபெறும். அப்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், பூஜைகள் நடக்கின்றன.

மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும்தான், பஞ்ச உலோகத்தினால் ஆன பஞ்சசபைக்குரிய 5 உற்சவர்கள் உள்ளனர். பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிரசபை, சித்திர சபை என பஞ்ச சபைக்கும் இத்திருக்கோவிலில் தனித்தனியாக உற்சவர்கள் உள்ளனர்.

இரு இடங்களில் எழுந்தருளல்

ஆருத்ரா விழாவையொட்டி நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பலக்கோல நடராஜர்), சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் ஆகியோரது உற்சவ மூர்த்திகள் 6-கால் பீடத்திலும், இதர 4 சபைகளுக்கான நடராஜர், சிவகாமி அம்மன் உற்சவர்கள் 100 கால் மண்டபம் என இரு இடங்களில், இந்த விழாவில் இன்று இரவில் எழுந்தருள்கிறார்கள்.

அப்போது பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும்.

நாளை, காலை பஞ்ச சபைக்குரிய 5 உற்சவ நடராஜரும், சிவகாமி அம்மனும் மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

அபிஷேகத்திற்கான பால், தயிர், இளநீர், நெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் வழங்க விரும்பினால், இன்று இரவு 7 மணிக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் கொடுக்கலாம் என்று கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com