ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? - ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலிடம் தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? - ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல்
Published on

சென்னை,

ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? என்பது குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் 600 பக்க இறுதி அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையுடன் தலைமை செயலகத்திற்கு வந்த நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டானிடம் வழங்கினார்.

ஜெயலலிதா மரணம்

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

75 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த போராட்டம் நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டார்.

158 பேரிடம் விசாரணை

ஆணையம் 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அலுவலர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 158 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

பல்வேறு காரணங்களினால் ஆணையத்துக்கு தமிழக அரசு 14 முறை கால நீட்டிப்பு வழங்கியது. ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியை ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது.

590 பக்க இறுதி அறிக்கை

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 590 பக்கங்களை கொண்ட இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என தனித்தனியாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரிடம் தாக்கல்

இதுதவிர ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையின் போது தெரியவந்த முக்கிய அம்சங்கள் என தனியாக 200 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இறுதி அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டும் வகையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று தாக்கல் செய்தார்.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நல பாதிப்புகள் இருந்தன?, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததற்கான காரணம் என்ன?, சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?, ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த பல்வேறு உடல்நல பாதிப்புகள் தான் அவரது மரணத்துக்கு முழு காரணமா? அல்லது வேறு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளனவா? என பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக ஆணையம் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்தகட்டமாக இந்த அறிக்கை தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு விவாதத்துக்காகவும், மேல் நடவடிக்கைக்காகவும் சட்டமன்றத்தில் வைக்கப்படும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com