அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: புதிய தமிழகம் கட்சி கவர்னர் மாளிகை நோக்கி 7-ந்தேதி பேரணி


அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: புதிய தமிழகம் கட்சி கவர்னர் மாளிகை நோக்கி 7-ந்தேதி பேரணி
x

கோப்புப்படம் 

அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி வருகிற 7-ந்தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகிறது.

சென்னை,

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பட்டியல் பிரிவில் மிகப்பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கும்; வடக்கு மாவட்டங்களில் ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கும் பெரும் பாதிப்பை உருவாக்கும் வகையில் எண்ணிக்கையில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள அருந்ததியர்களுக்கு ஒட்டுமொத்த 18 சதவீதத்தையும் தாரைவாக்கும் வகையில் முன்னுரிமை தந்து 3 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணை பிறப்பித்து கடந்த 15 வருடமாக அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.

அதன் விளைவாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கும் மேல் உள்ள இரு சமூக இளைஞர்களும் வேலைவாய்ப்பின்றி, நிர்க்கதியாக உள்ளார்கள். எனவே, தேவேந்திர குல வேளாளர்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டிட 3 சதவீத அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி வருகிற 7-ந்தேதி கவர்னர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணியை நடத்துகிறது. அப்பேரணியில் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story