23 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த அருணேஸ்வரன்: அமைச்சர் ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டு

அருணேஸ்வரனை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து, ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம், கோபாலபுரத்தில் அமைந்துள்ள சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கணக்குப்பிரிவில் எழுத்தராக பணியாற்றி வரும் கே.கே.இளங்கோவின் மகனாகிய இ.எல்.அருணேஸ்வரன், இளங்கலை கால்நடை மருத்துவ படிப்பை, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் 2018-2024 கல்வியாண்டில் பயின்றார். மேலும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் 24.01.2026 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 23 தங்க பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, எளிய பின்னணியில் இருந்து படித்து சாதனை படைத்த இ.எல்.அருணேஸ்வரனை பாராட்டும் வகையில் சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ரா.இராஜேந்திரன் இன்றைய தினம் துறையின் சார்பாக அழைத்து பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, அரூர் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வின்போது, சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சார்பாக ஆர்.பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் / செயலாட்சியர் சி.தனராஜ், தொழிலாளர் நல அலுவலர் மற்றும் து.முருகேசன், கணக்கு அலுவலர் மற்றும் மாணவரின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






