

தர்மபுரி,
அரூர் பேரூராட்சியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். பா.ம.க. வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இந்த பேரூராட்சியில் தலைவர் பதவியை கைப்பற்ற தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சியினரும் சுயேட்சைகள் மற்றும் பா.ம.க. வார்டு உறுப்பினர்களின் ஆதரவை பெற கடும் முயற்சி செய்தனர். இன்று பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட நிவேதாவுக்கு 6 வாக்குகள் கிடைத்தன. அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு வார்டு உறுப்பினரின் வாக்கு தி.மு.க.வு.க்கு கிடைத்தது.
இதையடுத்து நடந்த துணை தலைவருக்கான தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட இந்திராணியின் கணவர் தனபால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பேரூராட்சி தலைவராக பதவி வகித்தவர். பேரூராட்சி தலைவர், துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மனைவி- கணவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் கலைராணி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.