‘தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது’ - வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதை பழக்கத்தால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
‘தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது’ - வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமை, சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து, பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் சென்னை அண்ணாசாலை, சிவானந்தா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைதலைவர் குஷ்பு, மகளிர் அணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா உள்பட அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி பெண் நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனைதொடர்ந்து, வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறும்போது, "தமிழ்நாட்டில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 33 சதவீதமும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் 52 சதவீதமும் உயர்ந்துள்ளது. குடும்ப வன்முறை வழக்குகள் 63 சதவீதம் அதிகரித்துள்ளது.

பாலியல் குற்றங்கள் 109 சதவீதம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 36 மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதை பழக்கத்தால் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.

பின்னர், மாநில துணை தலைவர் குஷ்பு நிருபர்களிடம் பேசும்போது, "தி.மு.க. ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள், முதியோர்களுக்குக் கூட பாதுகாப்பு கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 'தாலிக்குத் தங்கம்' திட்டம் இன்று எங்கே?

ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித்தொகையும், தங்கமும் வழங்கப்பட்ட அந்தத் திட்டம் இன்று முடக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. எந்த தொகுதிகளில் போட்டி, எத்தனை தொகுதிகளில் போட்டி என தெரிந்த பின்னர் நான் தேர்தலில் போட்டுயிடுவது தொடர்பாக பேசுகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com