ஆசிய கோப்பை ஆக்கி: டிராபி சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஹீரோ ஆசிய ஆக்கி கோப்பை 2025" யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று அறிமுகப்படுத்தினார்.
சென்னை,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீனதைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்நிலையில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஹீரோ ஆசிய ஆக்கி கோப்பை 2025" யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக இன்று (22.08.2025) அறிமுகப்படுத்தினார். அத்துடன் தமிழ்நாடு ஆக்கி யூனிட் ஏற்பாட்டில் ‘ஹீரோ ஆசிய ஆக்கி கோப்பை 2025’-யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக ‘பாஸ் தி பால் டிராபி சுற்றுப்பயணத்தை’ (PASS THE BALL TROPHY TOUR) உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பொதுமக்களின் பார்வைக்காக ‘ஹீரோ ஆசிய ஆக்கி கோப்பை’ பயணம் செய்ய உள்ளது.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இந்திய ஆக்கி சம்மேளனத்தின் பொருளாளரும் தமிழ்நாடு ஆக்கி யூனிட் தலைவருமான சேகர் ஜெ. மனோகரன், தமிழ்நாடு ஆக்கி யூனிட் பொருளாளர் கே. இராஜராஜன், தமிழ்நாடு ஆக்கி யூனிட் இணை செயலாளர் டி. கிளெமென்ட் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.






