கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் சாதியை கேட்பதா..? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கட்டணமில்லா பஸ்களில் பெண்களிடம் விவரங்களை சேகரிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கட்டணமில்லா பஸ்களில் பெண்களிடம் பெயர், வயது, மொபைல் எண், சாதி போன்ற 15 விவரங்களை சேகரிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பெண்களுக்கு நகரப் பஸ்களில் கட்டணமில்லா சேவை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, பெரும்பாலான சாதாரண பஸ்கள் விரைவு நகரப் பஸ்களாகவும், சொகுசு பஸ்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. சாதாரண பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அலுவலகம் செல்லும் பெண்கள் மற்ற பஸ்களில் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிங்க் நிற பஸ்களில் பயணம் செல்லும் பெண்களை `ஓசி டிக்கெட்' என்று அவமரியாதையாக நடத்துனர்கள், அமைச்சர் ஆகியோர் அழைத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதற்கு, தி.மு.க அரசின் மீது பெண்கள் வைத்த குட்டுகள் அதிகம்.

இந்நிலையில், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கட்டணமில்லா பஸ் பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம், அவர்களுடைய பெயர், வயது, மொபைல் எண், சாதி போன்ற 15 விவரங்களை அந்த பஸ் நடத்துநர்கள் விசாரித்து, போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள படிவங்களில் சேகரிக்க தி.மு.க அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தள்ளன. இதனால், நடத்துனருக்கும், பெண்களுக்கும் இடையே தகராறுகள் ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெண்களிடம் அவர்களது பெயர், வயது மற்றும் மொபைல் எண்ணைகளை கேட்பது, அவர்களுடைய தனி உரிமையில் தலையிடுவது போன்றது. அதுவும், மொபைல் எண்ணை நடத்துநர்கள் வாங்கும்போது, அந்த பெண்களுக்கு அருகில் உள்ளவர்களும் அவர்களின் மொபைல் எண்ணைக் குறிப்பெடுக்க வாய்ப்புள்ளது.

இதன்மூலம் ஒருசில நடத்துனர்களோ அல்லது மொபைல் எண்ணை குறிப்பெடுத்த அருகில் உள்ளவர்களோ அந்த பெண்களிடம் பேச முயற்சி செய்யக்கூடும்.

பெண்களின் மொபைல் போனுக்கு வேண்டாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கும் வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் விட, பயணம் செய்யும் பெண்களிடம் நடத்துனர்கள், நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதுபோன்ற மக்களை தூண்டிவிடக்கூடிய 'சென்சிட்டிவ்' நடவடிக்கைகளை தி.மு.க அரசு செயல்படுத்துவதற்கு முன்பு, மூத்த அமைச்சர்களையோ அல்லது அனுபவம் வாய்ந்த அதிகாரிகளையோ முழுமையாக கலந்தாலோசித்ததா? இதனால் என்ன பின்விளைவுகள் ஏற்படும் என்று சிந்தித்ததா? என்பது தெரியவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தமிழக மக்களுக்கு முதல்- அமைச்சருடைய நிர்வாகத் திறமையின்மை மீண்டும் ஒருமுறை தெள்ளத் தெளிவாகியுள்ளது. அரசின் இதுபேன்ற நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக இதுபோன்ற புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com